பிரபல முன்னணி நடிகை சமந்தாவுக்கு (samantha) அவரது ரசிகர் ஒருவர் அவரது வீட்டிலேயே கோவில் கட்டி வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே ரசிகர்களுக்கு ஒரு நடிகரையோ அல்லது நடிகையையோ மிகவும் பிடித்து போய்விட்டால் அவர்களுடைய படங்களை முதல் நாள் முதல் காட்சிக்கு சென்ற பார்ப்பது வழக்கம்.
மேலும், தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் திரைப்படம் வெளியாகும் திரையரங்கில் அவர்களுக்கு பேனர் வைத்து அதில் பாலாபிஷேகம் செய்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அதையும் தாண்டி ஒரு சில ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்துவதற்கு தனித்துவமான விஷயங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் கோவில் கட்டி அழகு பார்த்ததை போல தற்போது சமந்தாவுக்கும் அவரது ரசிகர் ஒருவர் அவரது வீட்டில் கோவில் கட்டி வருகிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், நடிகை சமந்தாவின் (samantha) நடிப்பில் வெளியான சகுந்தலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதையடுத்து, நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், நடிகை சமந்தாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார்.
சந்தீப் நடிகை சமந்தாவிற்கு தன்னுடைய இல்லத்தில் கோவில் கட்டிவரும் நிலையில், சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது திருப்பதி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சந்தீப் கட்டும் இந்த கோவிலை சமந்தாவின் பிறந்த நாள் அன்று திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.