சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்துக்கு கூலி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக டீசரில் தகவல் வெளியாகி உள்ளது.
2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இருண்ட பக்கங்களான புதிய கதைக்களத்தினை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராக வலம் வரத் தொடங்கிய நிலையில், 2021ல் நடிகர் விஜயை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது.
இதையடுத்து கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம், வசூலை வாரிக் குவித்தது.
இதனிடையே லோகேஷின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கவே, லோகோஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (எல்.சி.யூ) என்று ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
விக்ரமுக்கும் பின்னர் மீண்டும் விஜய்யுடன் கரம் கோர்த்து லோகேஷ் இயக்கிய லியோ, உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படங்களில் ஒன்றானது.
அடுத்ததாக லோகேஷ் யாரை இயக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குவதாக தகவல்கள் வெளியானது.
ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்துவரும் வேட்டையன் படத்தினை தொடர்ந்து 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது.
அது தொடர்பான போஸ்டர்களும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாவதாக தகவல்கள் உலா வந்தன.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு குறித்த டீசர் இன்று( திங்கட்கிழமை) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து மாலை 6 மணிக்கு டீசர் வெளியானது.
துறைமுகப் பகுதியில் தங்கக் கடத்தல் கும்பலுடன் சண்டையிடுவது போன்ற காட்சியுடன் வெளியாகி உள்ள டீசரில், படத்தின்பெயர் கூலி என்று தனது கையில் கட்டியிருக்கும் பேட்சில் ரஜினிகாந்த் பதிவு செய்திருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இது தீ படத்தில் துறைமுகக் கூலியாக ரஜினிகாந்த் வேலை செய்யும் காட்சியை நினைவுபடுத்துகிறது.
இதே போல ரஜினிகாந்த் நடித்த பழைய படத்தின் பாடலும் சண்டைக்காட்சியின் பின்னணியில் ஒலிக்கிறது.
ரஜினிகாந்த் பேசும் பிரத்யேக வசனமும் ரசிகர்களால் இப்போதே மனப்பாடம் செய்யப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பட்டையைக் கிளப்பும் வகையில் வெளியாகி உள்ள டீசர், 36 நிமிடங்களில் 6லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார் நடித்த கூலி தலைப்பு மீண்டும் ரஜினிபடத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது, தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சமா என்னும் கேள்வியையும் எழுப்பி உள்ளது.