விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது போன்று பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களுக்கும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அய்யம்பட்டி எனும் கிராமத்தில் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி உள்ளார். இந்த நிலையில் பள்ளிச் சீருடையுடன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சதத்தை ஏற்படுத்தியுள்ளது.