இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் உலகின் 23 நாடுகளில் பரவிய நிலையில் நேற்றைய தினம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரைக்கும்,. நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதில் பள்ளிகள், விடுதிகளில் ஆங்காங்கே இருக்கும் நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும். தனிமனித இடைவெளிகளை பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றவேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது. இறைவணக்கம், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என பல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.