நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ் . கோவையில் வசித்து வந்த இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக சில நாட்களாக உடல்நலம் சரியின்றி அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது .
படப்பிடிப்புக்காக வேற்று மாநிலத்தில் இருந்த நடிகர் சத்யராஜ் தனது தாயாரின் இறப்பு செய்தியை கேட்டு விமானம் மூலம் உடனே கோவை திரும்பினார் .
இந்நிலையில் அவரது தாயார் நாதாம்பாள் மறைவுக்கு திரையுலகினர் , அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நாதாம்பாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக (11-08-2023) மாலை இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன்.
அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. சத்யராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .