திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகையிலும் உதவிட வேண்டும், மத்திய அரசு கச்சத்தீவை உடனடியாக மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், உள்ளிட்ட முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த பாரிவேந்தர்,
இந்திய ஜனநாயக கட்சி ஒரு தேசிய கட்சி. இக்கட்சி இன்னொரு தேசிய கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சி எது (பா.ஜ.க) என்பது உங்களுக்கே தெரியும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். மூன்று தொகுதிகளையும் நமக்கு ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளனர்.
எங்களை தங்களது கூட்டணிக்கு வருமாறு அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை நிருபித்துக்காட்டும் விதாமாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக முன்பாக மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.