அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் பாதிக்கப்படுவர்கள் மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை அடுத்து கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மருத்துவத் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.