டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் உள்பட 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில், தற்போது கொரோனா மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் பரவலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது.
அதன்படி டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், கேளிக்கை பூங்காக்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணாமாக பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். டெல்லி காவல் துறை தலைமை அலுவலகம் உள்பட அங்கு உள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்த்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய கொரோனா பாதிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 22,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.