அமா் பிரசாத் ரெட்டிக்கு (Amar prasad reddy) நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது பிரதமரை வரவேற்பதற்காக ஆட்களை அழைத்து வர அமர்பிரசாத் ரெட்டி தரப்பில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ஆண்டாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2000 ரூபாய் நோட்டை மாற்ற கமிஷன் 500! – போஸ்டரால் புஸ்வானமான பிசினஸ்
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா உள்ளிட்டோர் ஆண்டாள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஆண்டாளளையும் அவரையும் அவரது சகோதரி தேவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தேவி மற்றும் ஆண்டாள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் அமர்பிரசாத் ரெட்டி, (Amar prasad reddy) அவரது கார் ஓட்டுனர் உள்ளிட்டோர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமா் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான புகாா் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமா் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்குரைஞா் பால் கனகராஜ் ஆஜரானார்.‘இது பொய் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு.
பாஜக மாநில தலைவா் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு உதவியாக இருந்த அமா் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டாா்.
அப்போது காவல்துறை தரப்பில், ‘அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யவில்லை. அவா் சாா்ந்த கட்சியின் பெண் நிா்வாகியை, தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளாா்.
அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பெண் நிா்வாகியே இதுதொடா்பாக புகாா் அளித்துள்ளாா்’ என கூறினாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 10 நாள்களுக்கு கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமா்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
அவ்வாறு ஆஜராகாவிட்டால் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்த்துறை மனுதாக்கல் செய்யலாம் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.