இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வாய்ப்பாக இந்த நுழைவுத் தேர்வு இருப்பதால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்வதற்கும், விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் வரும் 24ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விண்ணப்ப செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது. புதிதாக விண்ணப்பிக்க மற்றும் படிவங்களை திருத்த ஜூன் 23 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து 24 ஜூன் இரவு 11.50 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் படி, ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 4,5,6,7,8,10 ஆகிய நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது வரை, 9,50,804 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
43 மத்திய பல்கலைக்கழகங்கள் 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளன.