உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
விறுவிறுப்புக்கும் , பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33 வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இப்போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் ஏன முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .
அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கில் உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .
இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர் . சதம் அடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 92 ரன்களிலும்,கோலி 88 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
அவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் மிரட்ட துரதிஷ்டவசமாக அவரும் 82 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவிந்திருந்தது .
இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி பெட்டிங் செய்தது. இமாலய இலக்கை விரட்ட பொறுப்புடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் முன்கள பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கி வந்த வேகத்தில் சென்றனர்.
19.4 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடப்பு தொடரில் முதல் அணியாக அரைஇறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது .
இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.