தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், தேனி உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் பகுதியில் இன்று காலையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 8-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் நாளை முதல் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.