தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்னே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் பல இடங்களில் வடிகால் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் முறையான அறிவிப்பு பலகைகளோ, பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்படாத காரணத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.