சேலத்தில், கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவரை சேலம் மாநகர காவல்துறையினர் வன்கொடுமை சட்டத்தின் (Tort Act) கீழ் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வியாழக் கிழமையன்று கோவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
அப்பொழுது, அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கோவிலுக்குள் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக்கம் அடுத்த நாள் காலையில் பிரவீன் மற்றும் அவரது தாய் தந்தை அனைவரையும் ஊர் பொதுமக்கள் மத்தியில் நிற்கவைத்து அநாகரீகமாகவும், முகம் சுளிக்கும் வார்த்தைகளாலும் பேசியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருமலைகிரி ஊராட்சி பகுதிக்கு சென்று பட்டியல் இன மக்களிடம் நடந்தவற்றை கேட்டு விசாரித்த நிலையில் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாணிக்கம் அவர்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சேலம் இரும்பாலை காவல்துறையினர் திருமலைகிரி ஊராட்சிக்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை அதிரடியாக கைது செய்த (Tort Act) நிலையில், அவரை கைது செய்ததை எதிர்த்து ஊர் மக்கள் சாலையில் திடீரென காவல்துறை வாகனத்தை மறித்து முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகே காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது போன்று தவறுகள் யார் செய்தாலும்
காவல் துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.