வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் வகையில் பேசிய எம்.எல்.ஏ வேல்முருகனை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதியமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையிலடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.
Also Read : புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்..!!
தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் இந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது என்.ஐ.ஏ வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.
ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தன் பொறுப்பிலிருந்து கடமை தவறி விட்டதாகவே கருதப்படுவார்.
நாளையே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கச்சேரி வைத்துக் கொள்வதாக சபதமிட்டுள்ளார் வேல்முருகன். முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! சிறையில் களி தின்ன ஆசையா வேல்முருகா? என நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .