தமிழக ஆளுநருக்கு ஏதோ அழுத்தம் இருப்பதனால் ஆன்லைன் ரம்மி (Online Rummy) தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி (Online Rummy) தடை சட்ட மசோதாவை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறியிருந்த நிலையில், அந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…
2022-அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, 2023 மார்ச் மாதம் 8-ம் தேதி வரை தன்னிடம் வைத்திருந்த ஆளுநர் அதனை ஆய்வு செய்தாரா?அல்லது வேறு ஏதேனும் செய்தாரா என தெரியவில்லை.
தமிழக அரசால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தடை சட்ட மசோதாவிற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் தடை சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்ற விவரம் தெரியவில்லை.
ஆளுநர் காலம் தாழ்த்துவது மட்டுமில்லாமல் நேற்று முன்தினம் அதனை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.
அரசின் வரம்புக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200 மிகத் தெளிவாக இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மாநில ஆளுநர் சட்டமன்றதால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒப்புதலுக்கு சென்றால் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சந்தேகங்கள் கேட்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது தன்னிடம் தொடர்ந்து ஆய்வுக்காக வைத்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறார் என தெரியவில்லை எனக் கூறிய அவர் அரசியலமைப்பு சட்டம் 200-ல் ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன என்பது குறித்து உள்ளது. அதை அவர் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சட்டமன்றம் ஒரு புனிதமானது, மாண்புடையது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு களங்கம் ஏற்படுகிற வகையிலான அந்த வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200 சரியாக படித்துவிட்டு ஆளுநர் அந்த வார்த்தைகளை போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என கருதுகிறேன்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி கள் பலரும் பேசியிருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் “மாநிலப் பட்டியலில் தான் உள்ளது” என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக தடை சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, இது புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டம் கிடையாது.
இவற்றையெல்லாம் தமிழக ஆளுநர் ரவி படித்திருந்தால் தமிழக அரசு இயற்றிய தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பார்.
ஆனால், ஏனோ தெரியவில்லை தமிழக ஆளுநரின் கவனத்திற்கு இந்த விஷயங்கள் எல்லாம் செல்லாமல் போய்விட்டது.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கொண்டு வந்த போது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு அவர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றும், சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்தும், மக்களின் கருத்துக்களை கேட்டும் அதன் அடிப்படையில் தான் இந்த தடை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த போது கவர்னர் இந்த சூதாட்ட விளையாட்டுக்களுக்கு எதிராகத்தான் இருந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகு அவருக்கு எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ தெரியவில்லை இந்த மசோதாவிற்கு எதிரான மனநிலைக்கு அவர் மாறிவிட்டார்.
இடைப்பட்ட காலத்தில் அவர் சூதாட்ட கம்பெனிகளின் உரிமையாளர்களை பார்த்ததாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது, அந்த பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது குறித்து எனக்கு தெரியாது.
இவ்வளவு நாள் காலம் எடுத்தும் அவர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அவருக்கு வேறு எங்கிருந்தோ அழுத்தம் வந்துள்ளது என்று தான் எண்ண தோன்றுகிறது.
இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதையும் ஆளுநர் இதுவரை விளக்கவில்லை, சட்டமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறிய அந்த வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும், யார் சொல்லி அந்த வார்த்தையை அவர் போட்டார் என தெரியவில்லை.
சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.