கிழக்கு கடற்கரைச்சாலைப் (ECR)பகுதியில் பறவைகள் வந்து செல்வதற்கு பாதிப்பில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டுமென அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கையில்,,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள். அதனால் காலம் காலமாகவே வெளிநாட்டு பறவைகள் இப்பகுதிகளுக்கு வலசை வருகின்றன.
கோவளத்திற்கு (ECR) அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக்காடு ஆகியன அதிக எண்ணிக்கையில் பறவைகள் உள்ள பகுதியாகும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளையும், உள்ளூர் பறவைகளையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு காலம் காலமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உதாரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சரணாலயத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இருக்கிறது.
அங்கு பறவைகள் அந்த அளவில் பாதுகாக்கப்படும் நிலையில் கோவளம் பகுதியில், வெடிகளை விட பலமடங்கு இரைச்சல் எழுப்பும் ஹெலிகாப்டர் சுற்றுலாவை எந்த அடிப்படையில் தாங்கள் அனுமதித்தீர்கள் என்பது தெரியவில்லை.
இத்தனைக்கும் ஹெலிகாப்டர்தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கில் பறவைகள் கூடும் இடம் உள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த உண்மைகளை ஆய்வு செய்த பிறகாவது ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் வரை கோடைவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஹெலிகாப்டர் சுற்றுலாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதை எதிர்த்து முருகவேல் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில் தனித்துவமான நுண்தாவரங்களும், உயிரினங்களும் உள்ளன. அப்பகுதியில் 10 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டர் பறந்தால் கூட அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஹெலிகாப்டர் சுற்றுலாவால் ஏற்படும் இரைச்சலால் கழுகுகள், மலை இருவாச்சி (Great Indian Hornbill) போன்ற அரியவகை பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்’’ என்று முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடைவிதித்தது.
ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த அனைத்து கருத்துகளும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கும் பொருந்தும்.
இதையும் படியுங்க : Final voter list – முதலிடத்தில் சோழிங்கநல்லூர்!
ஊட்டியில் 18 நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றால், கோவளத்தில் ஆண்டின் 365 நாட்களும் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தப்பட்டால் இன்னும் பல மடங்கு அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள், பறவைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன்கருதி கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்கு தாங்கள் தடை விதிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்துவதற்கும் பாமக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.