தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இரண்டு பேரும் இன்று மாலை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
சென்னை உள்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் .
செம்மண் குவாரி தொடர்பாக,கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில் இரவு வரை சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்னர் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர் .
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணையை அடுத்து அமைச்சர் பொன்முடி அதிகாலை 4 மணிக்கு தன்னுடைய இல்லத்திற்கு திரும்பினார்.
இந்நிலையில் இன்று மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய விவகாரம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிருப்பது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .