நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளதுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார ஸ்கூட்டர்கள் சமீபகாலமாக தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதே போன்று தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீ பிடித்து எரிந்து வருவது தொடர் கதையாக மாறியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவர் அண்மையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.