தர்மபுரி மாவட்டத்தில், உணவு தேடி ஊருக்குள் நுழைந்த ஆண் யானை ஒன்று மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து (elephant electrocuted) துடிதுடித்து உயிரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்னா யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றி திரிந்து வந்த நிலையில், பயிர்களை சேதப்படுத்தி வந்த மக்னாய் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், ஆண் ஒற்றை ஆணை மட்டும் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. இதனை அடுத்து கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி கிராமத்தில் நுழைந்த அந்த ஆண் யானை விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறிச் செல்லும் பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசியது.
இதனால் தலை, காது பகுதிகளில் யானைக்கு மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அந்த ஆண் யானை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த ஆண் யானையை தொடர்ந்து கண்காணித்தபடி வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானையின் உடலை ஜேசிபி உதவியுடன் மீட்டு யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்கள் பலரும் பங்கேற்று அந்த யானைக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்,
சுமார் 17 மணி நேரமாக எங்கும் நிற்காமல் யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆண் யானை இப்படி திடீரென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களாகவே தர்மபுரி மாவட்டத்தில் யானை நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு யானைகள் மின்சாரம் தாக்கி (elephant electrocuted) உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.