8 வது பெண்கள் உலகக்கோப்பை தொடரில் தற்போது லீக் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பலபரிட்சை செய்தன. ஏற்கனவே அரை இறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்த இங்கிலாந்து அணி தற்போது இந்த போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் இந்திய அணியை விட அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு செல்லும்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆரம்பம் முதலே பாகிஸ்தானின் பந்து வீச்சை சுலபமாக கையாண்ட இங்கிலாந்து, ரன் மழை பொழிய செய்தது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட் அடுதடுத்து சரிந்தாலும் வியாட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்கைவர் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார். ஒரு பக்கத்தில் அரை சதம் கடந்த வியாட் 59 ரன்களில் வெளியேற, பின்னர் ஜோன்ஸ் தனது அதிரடியில் பாகிஸ்தானை அலற வைத்தார்.
இறுதி கட்டத்தில் ஜோன்ஸ் அதிரடியாக 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்க்க அணி 200 ரன்களை கடந்து பெரும் இலக்கை அமைக்க தயாரானது. இறுதி வரை ஆடிய ஸ்கைவர் 40 பந்துகளில் 81 சேர்க்க 20 ஓவர்களில் 213 ரன்கள் குவிந்தது. பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா 2 விக்கெட்களை கைபற்றினார்.
இந்த பெரும் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதலே தடுமாற்றம் கண்டது. இங்கிலாந்தின் துல்லியமான பந்து வீச்சில் சீட்டுகட்டு போல பேட்ஸ்மேன் விக்கெட்கள் சரிந்தன. இறுதிவரை போராடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஒரு தோல்வி கூட சந்திக்காமல் 4 போட்டியிலுமே வெற்றி வாகை சூடியுள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை அடைந்துள்ள இங்கிலாந்து அரை இறுதி போட்டியில் எ பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.