எண்ணூர் பெரியகுப்பம் அருகே அமோனியா கசிவால் ஏற்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறையினர் ஊர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
எண்ணூர் பெரியகுப்பம் அருகே இயங்கி வரும் தனியார் உரத் தொழிற்சாலைக்கு தேவையான ரசாயனங்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அமோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்ற போது நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அமோனியா கசிவால் ஏற்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறையினர் ஊர் மக்களை அப்புறப்படுத்தினர். மேலும், பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாயு கசிவிற்கு பயந்து உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு சிலர் திருமண மண்டபங்கள் சாலைகளில் ஓரம் குடும்பத்துடன் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வந்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜோகட்டா, மற்றும் இணை ஆணையர் விஜயக்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமோனியா கசிவை சரி செய்து விட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.