சுற்றுச்சூழல் சீர்கேடு பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க மக்கள் அழுத்தம் தரவேண்டும் என்று சமூக ஆர்வலர் (pugalenthi) மருத்துவர் வீ புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர் வீ புகழேந்தி கூறியதாவது :
இந்தியாவில் காற்று,நீர்,மண் மாசடைவது மிகவும் அதிகமாகி வருகிறது. இதனால் மனிதர்களுக்கும்,கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துவது அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது நீரின் தரம் குறைந்தோ வருவதும் அதிகமாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைவது புவிவெப்பமடைதல் பிரச்சனையையும் அதிகமாக்கி வருகிறது.
உலக அளவில் சுவாசிக்கும் காற்றின் தரத்தை அளந்து வெளியிடும் IQAir தனது சமீபத்திய அறிக்கையில்,தலைநகரங்களில், புதுடெல்லியில் தான் காற்று மாசுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளதென்றும்,நாடுகளில் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பாராளுமன்ற நிலைக்குழு,வேளாண்துறையில்,இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்குப் பதில், செயற்கை வேதிஉரங்கள்,பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண்ணின் தரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதுஎன அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அக்குழு செயற்கை நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்-NPK-உரங்கள் வழக்கமாக 4:2:1 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என இருந்தும்,களத்தில்அவை 31:4.8:0.1 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுவதாலும்,மண்ணின் தரத்தை ஆய்வுசெய்து உறுதிசெய்யும் பரிசோதனை மையங்கள் இந்தியாவில் குறைவாக இருப்பதாலும்,நைட்ரஜன்மிகு செயற்கை வேதிஉரங்களை கட்டுபாடுகளின்றி அதிகமாக நாம் பயன்படுத்துவதாலும்,விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும்,மண்ணின் தரமும்,ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் தரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறுகிறது.
Also Read : https://itamiltv.com/suicide-attack-in-pakistan-6-people-including-chinese-were-killed/
மத்தியஅரசின் கொள்கை முடிவில் ஆலோசனை வழங்கும்,NITI Aayog மையமும், நீர் மேலாண்மையில்,இந்தியாவின் நிலை மோசமாக உள்ளதென கருத்து வெளியிட்டுள்ளது.
இந்தியாவில்,கேரளாவைத் தவிர்த்து(நீர்தேக்கங்களில் 50% நீர் நிரம்பியுள்ளது.),தென்இந்தியாவில் உள்ள நீர்தேக்கங்களில் 23% நீர் மட்டுமே நிரம்பியுள்ளது என்றும், ஒட்டுமொத்த இந்தியாவில் நீர்தேக்கங்களில் 2023ல் 38% நீர் மட்டுமே நிரம்பியுள்ளது என மத்திய நீர் கமிசனின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
தமிழகத்தின் மேட்டூரில் முழுக்கொள்ளளவான 2.65 இலட்சம் கோடி லிட்டரில் 28% மட்டுமே நீர் நிரம்பியுள்ளது.
மேற்சொல்லப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சனைகளை இந்திய அரசியல் கட்சிகள் பெருமளவு கண்டுகொள்வதில்லை.
தற்போதைய தேர்தலின் போது கூட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சுழல் பிரச்சனை குறித்து பெருமளவு எதுவும் இல்லை.!
எனவே சுத்தமான நீர்,காற்று,உணவு மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்தும்,மண்ணைக் காக்கவும்,உரிய அழுத்தத்தை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க மக்கள் முன்வருவது சிறப்பாக இருக்கும்.
சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு,மக்களின் சுகாதாரமும் (pugalenthi) இதனால் மேம்படும் என மருத்துவ வீ.புகழேந்தி தெரிவித்துள்ளார்.