திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்புள்ள போலி ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், மகள், மருமகள், முக்கிய உறவினர்கள் தொடர்புடைய இடங்கள் என சுமார் 50 இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் அடுத்தடுத்து பல சோதனைகளை நடத்தினர்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், மதுபான ஆலைகள், வீடுகள், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பல சோதனைகள் நடைபெற்றது .
இந்நிலையில் ஜெகத்ரட்சகன் எம்பி-க்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள வருமான வரித்துறை கூறியதாவது :
தவறான தகவல்களுடன் ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளது.
ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கப்பணம், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பல திடுக்கிடும் தகவல்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.