கேரளாவில் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கி உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் 1ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கும் என வானிலைஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் 1ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மே30, 31, மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.