தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விமான சேவைகள் 3 வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 22-ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வெளுத்து வாங்கிய கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் வீடுகள், தெருக்கள், வயல்கள் என மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விமான சேவைகள் இன்று 3வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பி வரும். ஆனால் தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் 2-வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று 3வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.