பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ‘பர்வேஸ் முஷாரப்’ (pervez musharraf) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (pervez musharraf) நீண்ட நாட்களாக ‘அமிலாய்டோசிஸ்’ என்ற நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பர்வேஸ் முஷாரப்பின் இறப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் ஃபகத் உசைன் கூறுகையில், “பர்வேஸ் முஷாரப் ஒரு சிறந்த மனிதர், அவரது சிந்தனையில் பாகிஸ்தானே முதலில் இருந்தது எனவும், கடவுள் அவர் மீது கருணை காட்டட்டும்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதமே முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்து இருந்ததாக பர்வேஸ் முஷாரப்பின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த போது, அப்போதைய பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் பர்வேஸ் முஷாரப் அதிரடியாக சிறையில் அடைத்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனையடுத்து, தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் துபாயில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பர்வேஸ் முஷாரப் உயிரிழந்தார்.