இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை இன்று காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் (minibus) சேவை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது.
அதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.
இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 145 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில், 81-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்க்கும் ஆவலில் காலையில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டனர்.
இந்த நிலையில், போட்டி நடைபெறுவதை முன்னிட்டு சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது . அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோரெயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 முதல் இரவு 8 வரைஇருக்கும். இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று சென்னைமெட்ரோ ரெயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.