தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு..!
சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட சிறப்பு மாநாடு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் பழ.வாஞ்சிநாதன், மாநில துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
இக்கூட்டத்தில், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், மாநிலம் முழுவதும் நிகழும் தீண்டாமைக் கொடுமைகளை தடுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்,
மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து வீட்டு மனைப்பட்டாக்களையும் வருவாய்த்துறை கணக்கில் ஏற்றிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இருளர், பழங்குடி மக்களுக்கு குடிமனைப்பட்டா, சாதிச்சான்று வழங்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மக்கள் பிரதிநிதிகள் எந்த அச்சுறுத்தலுமின்றி நிர்வாகத்தை நடத்திட உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.