எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக் கசிவு காரணமாக குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்துள்ளனர்.
எண்ணூர் பெரியகுப்பம் அருகே இயங்கி வரும் தனியார் உரத் தொழிற்சாலைக்கு தேவையான ரசாயனங்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அமோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்ற போது நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். தற்போது பாதிப்பின் சீற்றம் குறைந்துள்ள நிலையில், மக்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு திரும்ப தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பாதிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.