தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு பரவியகொரோனா வைரஸ் தொற்று இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனை அடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. அதன்படி ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில், 66 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஜெர்மனி நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் குறைவடையவில்லை.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர், நாட்டில் உள்ள அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே அந்நாட்டு அரசு பல முறை எச்சரித்த நிலையில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.