புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆளுநர் (tamilisai) தமிழிசையை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரி சோலை நகரில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி கடந்த 4 நாட்கள் முன்பு காணாமல் போன நிலையில் கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கொதித்துப்போன சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் இறங்கி கடுமையான போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது .
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ்-ஐ (19) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் சடலத்தை சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் .
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில் தற்போது போக்சோ பிரிவுவும் சேர்க்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்த வருகை தந்த போது பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய அவர் (tamilisai) குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.