தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் .
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது வெளியில் அவர் கூறும் கருத்துக்கள் மிக பெரிய சர்ச்சையாக உருமாறுகிறது . அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த விஷயங்கள் குறித்து அவர் கூறும் கருத்துக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு முன் வைக்கும் கோரிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசு அறிவித்திருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கில் முகாந்திரம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் கூறியதாக ஆளுநர் கருதுகிறார் . இதனால் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளையும் ஆளுநர் சந்திக்க உள்ளதாகவும் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஜூன் 27 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.