புதுச்சேரி அரசு மருத்துவமனையில் போதை நபர், மருத்துவரை கத்தியால் வெட்டியது தொடர்பாக ( doctor under attack ) சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்த வினோத்குமாரின் மகன், கடந்த 3 நாட்களுகு முன்பாக, தனது நண்பருடன் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திங்கட்கிழமை (நேற்று) இரவு, மகனைப் பார்ப்பதற்காக வினோத்குமார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் சென்று மகனை சந்தித்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை படித்துவரும் மருத்துவர் நவீன், மருத்துவமனைக்கு உள்ளே வந்தபோது, அங்கு நின்றிருந்த வினோத், மருத்துவர் நவீனை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளார்.
இதனால் கழுத்தில் காயம் அடைந்த மருத்துவர் நவீன் போட்ட கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினரும், புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரும் விரைந்து வந்து அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். மேலும் கத்தியால் வெட்டிய வினோத்குமாரை கைது செய்த புறக்காவல் நிலைய போலீசார், அவரை பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபோதையில் இருந்த அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே டாக்டரை கத்தியால் வெட்டிய சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பானதால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், அவரச சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், பணியை புறக்கணித்து மருத்துவமனை வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை செயலர் முத்தம்மா, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, வைத்திலிங்கம் எம்.பி, நேரு எம்.எல்.ஏ ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட, மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ( doctor under attack ) அவர்கள் வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, டாக்டர்கள், அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.