நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசின் ஏற்பாட்டில் டிச. 2 ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் புதிய வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நடத்தும் இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் நாளை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில் . ராஜ்நாத் சிங், மத்திய வா்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இதில் 12 மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்படவுள்ளன. மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப் பிரிவுகளை புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கும் 2 மசோதாக்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மிஸோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.