உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதங்கம் வென்று நாடு திரும்பிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி கெளரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் பிரக்ஞானந்தாவும் மோதினர்.
இதில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் 2 வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் போட்டிகளை முடித்து அஜா்பைஜானில் இருந்து இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை, விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவுக்கு மலர்தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு சால்வை போர்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.