ஹரியானாவில் தேர்தல் வேலைகள் வேகமெடுத்து வரும் நிலையில் தற்போது அம்மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பறிமுதல் வேட்டையில் களமிறங்கி உள்ளனர்.
ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், 3 வாகனங்களில் இருந்து சுமார் 2.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து (ஆகஸ்ட் 16) தற்போது வரை, 3.26 லட்சம் லிட்டர் மதுபானங்கள், 2,340 கிலோ போதைப்பொருட்கள், 48 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் என மொத்தம் 27 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னதான் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் சட்ட விரோதமாக ரொக்க பணம் , போதைப்பொருட்கள் ஆகியவை பல வகையில் கைமாறி வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் குறிப்பிட்ட சில இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.