அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி, 36 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம் மவுய். இந்த நகரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட காட்டுத் தீ, நகர்ப்புற பகுதிகளுக்கும் மெல்ல மெல்ல பரவி திரும்பும் பக்கமெல்லாம் கரும்புகை சூழ்ந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகள் என அந்நகரத்தின் பல பகுதிகள் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.
இந்த பயங்கர தீ விபத்தில், 36 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் அமெரிக்காவின் விமானப் படைகளும், கடலோர காவல் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், மவுய் நகரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தீயில் இருந்து தப்பிக்க நினைத்தவர்கள் பசிபிக் பெருங்கடலில் குதித்து தப்ப முயன்ற நிலையில், பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மவுய் நகரின் முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, இரங்கல் தெரிவித்து உள்ள அமெரிக்க அதிபர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதகதியில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளார்.