தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
இது தென் மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் இன்று தரைக்காற்று வீசலாம் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.