தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 30-ந் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி திலகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. குறிப்பாக புரசைவாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேப்பேரி, எழும்பூர், போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை காரணமாக வாகனங்கள் மெதுவாகவே நகர்ந்து செல்வதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
அதே போல் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு காடை யாம்பட்டி, கரியகோவில், தம்மம்பட்டி, பெத்தநா யக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.