தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டாலும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல் தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை என 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 30, 31, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 1ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செப்டம்பர் 2 , 3 ஆகிய தேதிகளில் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுள்ளது.