கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதில் யுவராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் எனவும் அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பேசிய கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன்;
” இந்த வழக்கில் எங்களுக்கு பல்வேறு தடை கற்கள் இருந்தன. ஒரே ஒரு சாட்சியாக இருந்த சுவாதியும் பிறழ் சாட்சியான பிறகு இந்த வழக்கு நிற்காது என்றார்கள். இந்த வழக்கில் சாட்சிகளே இல்லை என்றானபோது இன்றைய வளர்ந்துவருகின்ற விஞ்ஞான சூழலில், நம்முடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிசிடிவி காட்சி மூலம் முக்கிய சாட்சியை கண்டறிந்தோம்.
அதோடு கோகுல்ராஜ் தானாகவே தற்கொலை செய்துகொண்டார் என நம்ப வைப்பதற்காக ஆவணத்தை உருவாக்கி A1 கொலை குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை கோகுல்ராஜ் ஊடகங்களில் பரப்பி விட்டார்.
இந்த வழக்கில் கோகுல்ராஜ் உடற்கூராய்விற்காக தனி மருத்துவ நிபுணர்களை நியமிக்கவேண்டும் என மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு கோரிக்கை விடுத்தது தான் வழக்கின் அடித்தளத்தையே மாற்றியது. இந்த கோரிக்கையை அப்போதைய நீதிபதிகள் ஏற்று நியமதித்ததன் பேரில் சம்பத் என்ற மருத்துவரின் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவக்குழு செய்த உடற்கூராய்வின் முடிவில் கோகுல் ராஜ் மரணம் தற்கொலை அல்ல கொலை’ என தெரியவந்தது.
இந்த வழக்கில் யுவராஜ் உட்பட விடுவிக்கப்பட்ட 5 பேரும் கைப்பேசிகளை அணைத்து வைத்துவிட்டு வேறு கைப்பேசிகளை பயன்படுத்தினார்கள். யுவராஜ் மற்றும் 5 பேர் உட்பட இறந்துபோன ஜோதிமணியும் அந்த கோவில் சிசிடிவி காட்சியில் இருப்பதை தடயவியல் நிபுணர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. பிறகு நீதிபதிகளிடம் காட்சிகளை காண்பிக்கப்பட்டது.
இதன்பிறகு மீண்டும் ஒரு முக்கிய சான்றாக, புதிய தலைமுறை நிருபராக இருந்த கார்த்திகைசெல்வன் நடத்திய, விஷ்ணுப்ரியாவின் தற்கொலை தொடர்பான விவாத நிகழ்ச்சியின் வீடியோ காட்சி அமைந்தது. அந்த விவாத நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார். அப்போது மலையில் இருக்கும் கோவிலுக்கு சென்றதையும், கோகுல்ராஜ் மற்றும் சுவாதியை சந்தித்ததையும், பிறகு அவர்களிடமிருந்து செல்போன் பிடுங்கியதையும் ஒப்புகொண்டார்.
திருச்செங்கோடு பெண் டிஎஸ்டிபி-யாக இருந்த விஷ்ணுப்ரியா தலைமையிலான அதிகாரிகளே இது தற்கொலையாக இருக்கலாம் என கூறினர்.” இவ்வாறு தனது பேட்டியில் வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறினார்.
(காவல் உயரதிகாரிகள் அழுத்தம், யுவராஜ் மிரட்டியது போன்ற காரணங்களால் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது)