இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வரது திடீர் மறைவு திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இயக்குநர் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் மாரிமுத்து. மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். 57 வயதான இவர் தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார். இந்த சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிழந்தார். இன்று காலை வளசரவாக்கத்தில் ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் இருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வடபழனி சூர்யா மருத்துவமனையில் உள்ள நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவரது மறைவிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.
இந்த நிலையில் சக நடிகர் கமலேஷ் இது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி வெளியே சென்ற நடிகர் மாரிமுத்து, தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவரின் மகளை தொடர்பு கொண்ட போது தான் விவரம் தெரிய வந்தது” என நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் பகிர்ந்துள்ளார்.
திரை உலகினர் இரங்கல்
நடிகர் சரத்குமார்
“இயக்குனரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த ‘புலிவால்’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறேன். வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுபவீ
புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தவர், இன்னும் பல உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர்” என நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுபவீ இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து
எனது கவிதைகளில் உயிருள்ள ஒலிப்பேழை; அவரின் மறைவுக்கு என் தமிழும் சேர்ந்து துக்கப்படுகிறது” நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்கவிஞர் வைரமுத்து.
நடிகர் பிரசன்னா
நாங்கள் சகோதரர்களைப்போல இருந்தோம்” மாரிமுத்து இயக்கிய ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ படங்களில் நடித்த பிரசன்னா உருக்கம்!