அண்ணன் சீமானின் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை நாங்கள் எங்கள் மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான
முனைவர்.ஆ.சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அண்ணன் சீமான் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் இருந்தது. நேற்று நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் அவரையும் இனி ஏனைய அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.
எங்கள் மாநாடு நடப்பதற்கு முன்பு அண்ணன் சீமான் பேசிய பேச்சுக்களுக்கும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
எங்கள் கட்சியின் தலைவருக்கும், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் பல வேலைகள் உள்ளன. எங்கள் கழகத்தில் இப்போது இருப்பவர்கள் தற்காலிக பொறுப்பாளர்கள்தான். எனவே, பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்க தகுதியும், திறமையும், ஆர்வமும் கொண்ட கழகத் தோழர்களை நியமிக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
Also Read : அப்பப்பா.. திரும்பும் திசையெல்லாம் கடவுளே – அஜித்தே..!!!
அதோடு, கழகத்தின் கொள்கைகளை கழகத்தின் அனைத்து நிலை தோழர்களுக்கும், பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும். எனவே, இப்படி பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.
எங்கள் அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு களமாடிக்கொண்டு இருக்கிறோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை எங்கள் தலைவர் தளபதி எங்களுக்கு உணர்த்தியுள்ளார்
அண்ணன் சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை நாங்கள் எங்கள் மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை. முடிவை தமிழ்நாட்டின் மக்களின் கரங்களில் கொடுத்துவிட்டு நாங்கள் எங்கள் பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது.