ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நியமனத்திற்கான (Assistant Surgeon – General) தேர்வுகள் நடைபெற்று 8 மாதங்களாகியும் தேர்வாணையம் இதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடாததால் தேர்வு எழுதிய மருத்துவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனையளிக்கின்றது.
ஏழை மக்கள் தடையற்ற மருத்துவ சேவையைப் பெற முடியாத வகையில், காலியாகவுள்ள அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்று வந்த ஊழல் மற்றும் முறைகேடுகளைக் களையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தை (MRB – Medical Services Recruitment Board) தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் 4 முறை தேர்வுகள் நடத்தி எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2018க்கு பிறகு மருத்துவப் பணியாளர்களுக்கான தேர்வு வாரியத்தால் நான்கு முறை மருத்துவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் கொரொனோ பெருந்தொற்று காரணமாக அத்தேர்வுகள் நடைபெறவில்லை.
இறுதியாக 2023 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டபடி மருத்துவர் தேர்வுகள் நடைபெற்றபோதும் இன்றுவரை அம்முடிவுகள் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை. மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1752 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், நடைபெற்றுள்ள தேர்வின் மூலம் 1021 மருத்துவர்களை மட்டுமே (ஏறத்தாழ 60% இடங்களை மட்டும்) நியமிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான உட்கட்டமைப்பின்மை, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் நிலவுகின்ற போதிலும், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற உயிர்காக்கும் பெருந்தொண்டே கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படை காரணமாகவுள்ளது.
தனியார்துறையில் மருத்துவம் என்பது, பணம் கொழிக்கும் வணிகமாகிவிட்ட சமகாலத்தில், ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக அரசு மருத்துவர்களே உள்ளனர்.
அத்தகைய போற்றுதற்குரிய அரசு மருத்துவர்களை போதிய அளவில் நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவதென்பது ஏழை மக்களின் நல்வாழ்வினை அலட்சியப்படுத்தும் கொடுஞ்செயலாகும். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இன்மையால் தற்போது பணியாற்றும் மருத்துவர்களின் பணிச்சுமை இருமடங்கு அதிகரித்துள்ளதால், அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இதனால் அரசு மருத்துவ சேவையில் தடையும், தவறுதல்களும் நடைபெற்று, இறுதியில் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் கொடுமைகளும் நிகழ்கிறது.
ஆகவே, கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட, அரசு மருத்துவர்கள் தேர்வின் முடிவுகளை விரைவாக வெளியிடுவதோடு, அதனை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதிலும் காலியாகவுள்ள 1752 அரசு மருத்துவர் பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.