கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை, சென்னை கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 100 ஐ தாண்டி உள்ளது, அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறனர்.