பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான முதல் ஆசிய கோப்பை போட்டி நேற்று நடைப்பெற்றது. துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அஸாம், மோகமத் ரிஸ்வான் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தின. பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனான கேப்டன் பாபர் அஸாம் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் கேட்ச் குடுத்து 10 ரன்களில் வெளியேறினார்.
பிறகு வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் மற்றும் இப்திகார் மட்டும் தாக்கு பிடித்து சீராக ரன்களை குவித்தனர். இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அந்த அணி 147 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைபற்றினார், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும், அரஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ஆவேஸ் கான் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. தொடக்க வீரரான கே எல் ராகுல் பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை மேற்கொண்டார். ரோஹித் ஷர்மா, கோலி இணை அணியை சிறிது சரிவிலிருந்து மீட்டது. ரன் குவிக்க தடுமாறிய ரோஹித் ஷர்மா 12 ரன்களில் வெளியேற, கோலியும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
89 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி மீண்டும் சரிவை சந்தித்தது. 5 ஓவர்களுக்கு 59 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் போக்கயே மாற்றினார். பவுண்டரிகளாக அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அவுட் ஆனார். பின்பு 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு உண்டானது. மொஹமத் நவாஸ் வீசிய பந்தில் சிக்சர் அடித்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.