பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் இணை, தென்கொரியாவின் லீ வோங்கோ – ஓ யே ஜின் இணையை எதிர்கொண்டது.
முதல் சுற்றை இழந்த போதும் மனம் தளராத இந்திய இணை, அடுத்தடுத்த சுற்றுகளில் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகளை குவித்தது.
இறுதியில் 16-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது.
இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
Also Read : கேரளா நிலச்சரிவு – உயிரிழப்பு 135-ஆக உயர்வு..!!
இதற்கு முன்பு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர், 124 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார் .
முன்னதாக 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆங்கிலோ இந்தியனான நார்மன் பிரிட்சர்ட்ஸ் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. மேலும், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் தன் வசப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து நாட்டிற்கு 2 பதக்கங்களை பெற்று தந்தமைக்காக பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.