சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” ஐரோப்பா , ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2 ஆம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது என்று தெரிவித்த அவர், தமிழக கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னை ,மதுரை, கோவை திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல், குரங்கம்மைக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்த அவர், பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் சென்னையில் குரங்கம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு தயாராகியுள்ளது எனவும் கூறினார்.