மத்திய அரசு சார்பில் டாப் 500 லிஸ்டில் உள்ள நிறுவனங்களில் இளைஞர்கள் உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பெறும் வகையில், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில், இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமிரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதற்கட்டமாக 2024-25 ஆம் நிதியாண்டில் 1.25 லட்ச இளைஞர்கள் இந்த வாய்ப்பை பெறவுள்ளனர். அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இத்திட்டத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 25 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். pminternship.mca.gov.in என்ற இணையதளம் மூலமாக இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண்ணாண 1800 116 090 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் படியாக 5 ஆயிரம் ரூபாயும், 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது. 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
Also Read : ஷேக் ஹசீனா எங்கே? – கைவிரித்த வங்கதேச இடைக்கால அரசு..!!
முழு நேர படிப்பை பயில்பவராகவோ, முழு நேர வேலையில் இருப்பவராகவோ இருக்கக் கூடாது. வீட்டில் உள்ள நபர்கள் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த (EWS) மாணவர்களுக்கு மட்டுமே இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற முடியும்.
குறிப்பாக, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்இஆர் போன்ற முதன்மைக் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிஏ அல்லது சிஎம்ஏ தகுதி பெற்றவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள். உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள், பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றவர்கள் அல்லது பிஏ, பிஎஸ்சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பார்மா போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு “பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் – பைலட் திட்டம் (நிதியாண்டு 2024-25)” என்ற லிங்க்கில் சென்று திட்டத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.